கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, வால்பாறை மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில், இன்று (21.10.2026) காலை ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது.
இதனால், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வாகனங்களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் பாறையை அகற்ற முயன்றனர். இருப்பினும், பாறை மிகப்பெரிய அளவில் இருப்பதால் அதனை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ராட்சத பாறையை இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பாறை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க முடியும் என்பதால், இரு மார்க்கங்களிலும் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பின் காரணமாக, பொள்ளாச்சி – வால்பாறை இடையேயான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
