சபாநாயகரைப் புகழ்ந்த மாரிமுத்து எம்.எல்.ஏ. : சட்டப்பேரவையில் நெகிழ்ச்சி!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் (08.09.2026) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ மாரிமுத்து கையில் எவ்விதக் குறிப்பேடுகளும் இல்லாமல் மக்கள் பிரச்சனைகளை விரல் நுனியில் வைத்துப் பேசிய உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

அதில் மாரிமுத்து பேசியதாவது, “எளிய மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கு நீங்கள் அளித்திருக்கிற வாய்ப்பு என்பது சாதாரணமானது அல்ல. இது கோடிக்கணக்கான எளிய மக்களுடைய வாழ்வியலை பிரதிபலிக்கிற மன்றமாக நீங்கள் மாற்றிவிட்டீர்கள். உங்களை (சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்) வணங்குகிறேன்” என்றார். இவ்வாறு மாரிமுத்து பேசிக்கொண்டிருந்தபோது, அவரை நோக்கி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வணக்கம் வைத்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய மாரிமுத்து, “அதேபோல, இந்த சட்டப்பேரவை செயலகத்தில் சட்டப்பேரவை நடைபெறும் நாட்களில் மட்டும் பணியாற்றும் வகையில் கிட்டத்தட்ட 28 பட்டதாரிகள், 30க்கும் மேற்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்கள் மற்றும் 82 உதவியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் மட்டுமே வேலை இருக்கிறது. அதற்குப் பின்னர், ஆண்டுதோறும் இவர்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு ஒரு மாற்று வேலை வாய்ப்பையாவது அல்லது தற்காலிக வேலை வாய்ப்பையாவது ஏற்படுத்தி, அவர்களுடைய வாழ்வியலை உத்தரவாதப்படுத்துவதற்கு, உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 

அவர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். அதே சமயம் மாரிமுத்துவின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் எதார்த்தமான பேச்சைக் கேட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முகத்தில் மெல்லிய புன்னகையோடும் வியப்போடும் அவரது பாராட்டைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு மாரிமுத்துவின் பேச்சை வெகுவாக ரசித்தார். 

Source link