சமூக வலைதளங்களில் 21 லட்சம் ஃபாலோயர்ஸ்: உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 33 வாக்குகள் பெற்று ஜோத்பூர் பிரபலம் தோல்வி

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் கிடைக்கும் புகழும் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பாளர்களும் தேர்தலில் வாக்குகளாக மாறுவதில்லை என்பதற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல் சான்றாக அமைந்துள்ளது.

ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஓசியான் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்தோன் கி தானி-II பஞ்சாயத்து தலைவர் (சர்பஞ்ச்) பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முகநூல் மற்றும் ஜோதிடக் கலை நிபுணராகவும், சமூக வலைதளங்களில் பெருமளவிலான பின்தொடர்பாளர்களைக் கொண்டவராகவும் விளங்கும் ஓம்பிரகாஷ் பிஷ்னோய் என்பவர் போட்டியிட்டார்.

சமூக வலைதளங்களில் 21 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ஓம்பிரகாஷ் பிஷ்னோய், சுமார் 1,600 வாக்காளர்களைக் கொண்ட தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற தேர்தலில் வெறும் 33 வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இணையதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் பிஷ்னோய், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 14 லட்சம் பின்தொடர்பாளர்களையும், முகநூல் பக்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களையும், யூடியூப் தளத்தில் சுமார் 5.5 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளார். மேலும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோசாலையின் (பசுக்கள் காப்பகம்) தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, மற்றவர்களின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஒரு ஜோதிடரால் தனது சொந்தத் தோல்வியைக் கணிக்க முடியாமல் போய்விட்டது என்று சமூக வலைதளங்களில் பலரும் அவரைக் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் சமூக வலைதளங்களின் விருப்பங்களை (லைக்குகள்) அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதில்லை என்றும், மாறாக நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகள் மற்றும் கிராமத்தில் ஆற்றிய பணிகளின் அடிப்படையில்தான் எதிர்கொள்ளப்படுகின்றன என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் தோல்விக்குக்குப் பிறகு பிஷ்னோய் தனது கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “எனது கிராமமான இந்தோன் கி தானி செகண்ட் பஞ்சாயத்தின் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றிகள். 1,600 வாக்காளர்களில் எனது குடும்பத்தைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் மட்டுமே எனக்கு வாக்களித்துள்ளனர். எனது அலுவலகத்தில் போதைப்பொருட்களோ அல்லது மதுபானங்களோ பயன்படுத்தாமல் இந்த தேர்தலைச் சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடினமான காலங்களில்தான் உண்மையாக உங்களுடன் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இறைவன் துவாரகாதீசன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link