டெல்லியில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள், கடந்த 26 ஆம் தேதி ஜேடபிள்யூ மேரியட் மற்றும் அண்டாஸ் டெல்லி ஆகிய ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமையலறை உள்ளிட்ட பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள், காலாவதியான பொருட்கள் (87 கிலோ இனிப்புகள்/கேக்குகள்) மற்றும் முறையற்ற உணவு சேமிப்பு உள்ளிட்ட மோசமான உணவு பாதுகாப்பு விதி மீறல்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
உணவு பாதுகாப்பு குறித்து ஆணையம் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஓட்டல்களில் இது போன்ற மோசமான மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான விதிமீறல்களுக்கு எதிராக எப்எஸ்எஸ்ஏஐ தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு தர நிர்ணயத்தின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
5 நட்சத்திர ஓட்டல்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் எப்எஸ்எஸ்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி ரஜித் புன்ஹானி, “நாட்டில் உள்ள முன்னணி 5 நட்சத்திர ஓட்டல் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமீறல்கள் எதையும் சகித்துக்கொள்ள முடியாது. நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய ஓட்டல்களில் ஆய்வுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
