சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் என்ன பிரச்னை?

-நமது நிருபர்-

ஹிந்தி நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல வந்த கூலிப்படை, பாதுகாப்பின்றி இருந்த டைகர் ஷெராப்பை சுட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுடப்பட்ட டைகர் ஷெராப் உயிர் தப்பி விட்டார். சம்பவம் தொடர்பான விசாரணை சூடு பிடித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய மூவர் பிடிபட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் குறி, சல்மான் தான் என்று தெரிவித்துள்ளனர்.

பின்னணி இதுதான்!

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், இந்தியா மட்டுமின்றி உலக நாடு முழுவதும் கூலிக்கு கொலை செய்வது, மிரட்டி பணம் பறிப்பது, போதை கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளான். எனினும் அவர்களது கொட்டம் அடங்கவில்லை.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை இந்த கும்பல் நீண்ட நாட்களாக கொலை செய்ய முயற்சிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, 1998ல் நடந்த சம்பவம்.

நடிகர் சல்மான் கான், நடிகையர் சிலருடன் சுற்றுலா சென்றபோது ராஜஸ்தானில் ‘பிளாக்பக்’ என்ற ஒரு வகை மான் இனத்தை வேட்டையாடி விட்டார். குறிப்பிட்ட அந்த மான் இனம், பிஷ்னோய் சமூகத்தினரால் புனித விலங்காக கருதப்படுகிறது. இது தொடர்பாக சல்மான் கான் மீது வழக்கு பதியப்பட்டது. அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்போது அந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தங்கள் சமூகத்தினர் புனிதமாக கருதும் மானை வேட்டையாடிதால், சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் முதலில் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தான். இந்த சம்பவம் 2018 ஜோத்பூர் கோர்ட்டில் நடந்தது.

சல்மான் கான் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து வழிபட்டு தங்கள் சமூகத்தினரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பது ஒரு தரப்பாரின் கருத்து.

எனினும், இத்தகைய அடாவடி, மிரட்டல், கோரிக்கைகளை பிஷ்னோய் சமூக அமைப்புகள் ஆதரிக்கவில்லை. தாங்கள் அஹிம்சை வழி வந்தவர்கள் என்று அவர்கள் அறிவித்து விட்டனர். எனினும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானை விடுவதாக இல்லை. தொடர்ந்து கொலை மிரட்டல், கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாலிவுட் திரையிலகிலும் பலர் மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிக்கும்படி சல்மான் கானை வலியுறுத்தி வருகின்றனர். பிரபல பாடகர் அனுப் ஜலோடா, ‘பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஒரே வழி, பிஷ்னோய் சமூகத்தினரிடம் சல்மான் மன்னிப்பு கேட்பதுதான்’ என்று இப்போதும் கூறியுள்ளார்.

Source link