சாதியக் கொடுமைகளும் மனித உரிமை மீறல்களும்
தீண்டாமை என்னும் ஒருபேய் – இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் – எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் – செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்”
-பாரதிதாசன்
சாதியக் கொடுமைகளும் மனித உரிமை மீறல்களும் இன்றும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருப்பதை உணர்த்தும் மிக துயரமான நிகழ்வு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்த கிராமத்தில் நடைபெற்றது. தலித் பெண் தொழிலாளியான சசிகலா, சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை நடைமுறைகளால் மனவேதனையடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
நிகழ்வின் பின்னணி :
மேலூர் பகுதியை சேர்ந்த சசிகலா, அன்றாடக் கூலி வேலை செய்து வரும் எளிய பின்னணியைக் கொண்டவர். உள்ளூர் தேநீர்க் கடைகளில் இன்னும் ரகசியமாகவும் பகிரங்கமாகவும் பின்பற்றப்படும் “இரட்டை டம்ளர் முறை” காரணமாக இவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். அங்கு அவருக்குத் தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டுள்ளது.
சாதி அடிப்படையில் மக்களை பிரித்து, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு தனி டம்ளரில் தேநீர் வழங்குவதும், சமூகத்தில் அவர்களை அமர விடாமல் தடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
