மதுரை: பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, 90, காலமானார்.
மதுரையைச் சேர்ந்தவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவருக்கு வயது,90. இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக, வயது முதிர்வு காரணமாக உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செப் 11) அவர் மதுரையில் காலமானார்; இவர் எளிய தமிழில் ஆழமான கருத்துக்களை பேசி பட்டிமன்றங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்.1936ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்தார்.
தமிழ்ப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். திருக்குறளுக்கு எளிய முறையில் உரை எழுதி வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வருகிறார். உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்துள்ளார்.
தமிழ் இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவு செய்து அறிந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
