சிக்கலில் வைத்திலிங்கம்? தி.மு.க அரசு மூடிய வழக்கை கூடுதலாக விசாரிக்க த.வெ.க அரசு நடவடிக்கை: அறப்போர் பாராட்டு

முன்னாள் அதிமுக வீட்டு வசதித் துறை அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் மீதான ரூ.28 கோடி லஞ்ச வழக்கின் கூடுதல் விசாரணைக்கு சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மூடப்படும் தருவாயில் இருந்த முக்கிய ஊழல் வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த 2015-16ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், ‘ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்’ நிறுவனத்திற்கு 1,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்குவதற்காக ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்ரீராம் குழுமத்தின் ‘பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ்’ நிறுவனம் மூலமாக, வைத்திலிங்கத்தின் மகனுக்குச் சொந்தமான ‘முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு ரூ.27.9 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ‘அறப்போர் இயக்கம்’ போதிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. இருப்பினும், கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 2026-இல் இந்த வழக்கை முடித்துவைப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. புகாரளித்த அறப்போர் இயக்கத்திற்கு இதுகுறித்த எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

பின்னர் ஜூன் மாதத்தில் பத்திரிகைச் செய்திகள் மூலமாக வழக்கு மூடப்பட்ட விவரத்தை அறிந்த அறப்போர் இயக்கம், வழக்கு மூடுவிழா காண்பதை எதிர்த்து உடனடியாக சென்னை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதேவேளையில், இவ்வழக்கில் கூடுதல் விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, தற்போது இந்த வழக்கின் கூடுதல் விசாரணைக்காக 3 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் அறப்போர் இயக்கம் தொடர்ந்த மற்றொரு முக்கிய வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தச் சூழலில், வழக்கை மீண்டும் கூடுதல் விசாரணைக்கு உட்படுத்தும் தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த அரசு இந்த வழக்கை மூடிய விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர் சித்தார்த் பிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. ஊழலுக்கு எதிரான அறப்போர் தொடர்ந்து தொடரும் என்றும் இயக்கம் உறுதியளித்துள்ளது.

Source link