பழனி நில மோசடி விவகாரம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குச் சார் பதிவாளர் ஆஜர்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 6ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் 2 கோடிக்குக் கணக்கு கிரயம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்குக் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஞாயிறு தவிர தினமும் காலை 10:30 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடன் அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.

கோப்புப்படம்

இந்நிலையில் நில மோசடி வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (27.07.2026) நேரில் ஆஜராகியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த நிபந்தனையின் அடிப்படையில், தென்மண்டல எஸ்.பி. சஜிதா தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் முன்னிலையில் அவர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அதன்படி சார்பதிவாளரிடம் நிலத்தின் போலி ஆவணங்கள், விதிமீறி நடத்தப்பட்ட பத்திரப்பதிவின் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக வாக்குமூலம் பெற்று வருகின்றனர். 

Source link