காரைக்குடி : ”தொகுதி மறுவரையறை மசோதாவால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது. முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துள்ளது,” என, காரைக்குடியில் பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிரதமரின் வருகையால் 10 நாட்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவால், எந்த மாநிலத்திலும் விகிதாச்சாரம் பாதிக்காது. எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம், கேரளா போன்ற பாதிக்கப்படக்கூடிய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பழைய சதவிகிதமே தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துள்ளது. தோற்கும் கும்பலுக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறோம் என்ற பயத்தில் உள்ளார். தொகுதி மறு வரையறையில் எந்த பாரபட்சமும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர், இப்பிரச்னை குறித்து ஓராண்டிற்கு முன்பும் தெரிவித்தார். தற்போதும், இதுகுறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். சிதம்பரம் பொய்யை முன்னிறுத்தி பேசுகிறார். ஸ்டாலின் பேசுவதற்கு வேறு எதுவும் காரணம் இல்லாததால் தொகுதி மறு வரையறை குறித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. இது குறித்து ஸ்டாலினை வைத்துக் கொண்டே தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பேசியது வரவேற்கத்தக்கது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அரசியலை விட்டு விலகினால், முழு பாரதமும் நன்றி சொல்லும். அவர் பயனற்ற, மோசமான அரசியல்வாதி. அவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் மீதமிருக்கும் நாட்கள், அவருடைய மகனுக்கு நல்ல நாட்களாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
