லே: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், லடாக்கில் 10 அடி உயரத்திற்கு தடுப்பணை ஒன்றை இந்தியா கட்டி உள்ளது. இந்த அணை சிமென்ட் பயன்படுத்தாமல் இயற்கையான பாறாங்கல் வாயிலாக கட்டப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை இந்த ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்பட மாட்டாது என இந்தியா கூறியது.
ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியாவின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.பல ஆண்டுகளாக வசந்த காலங்களில் நீர்மட்டம் குறைவாக உள்ளதாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் பாகிஸ்தான் சென்றதாலும் அப்பகுதி விவசாயிகள், பயிர் செய்வதில் சிரமப்பட்டனர். விளைநிலங்கள் வறண்டு போவதால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக முடக்கினர்.
தற்போது சிந்து நதிநீரை இந்தியாவிற்கு பயன்படுத்தும் வகையிலான பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதன்படி, லடாக்கில் உப்ஷியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை மத்திய அரசு கட்டி உள்ளது. 10 அடி உயரம் கொண்ட இந்த தடுப்பணையானது, சிமென்ட் இல்லாமல் பாறாங்கற்கறால் கட்டப்பட்டு உள்ளது. இதில் 4 கோடி லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அதனை பாசனக் கால்வாய் வாயிலாக வறண்ட கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்.
சிந்து நதி நீர்கள் பாகிஸ்தானுக்குள் பாய்வதற்கு முன்பாக இந்திய எல்லை பகுதிக்குள் தனது மக்களுக்கு பயன்படுத்தும் வகையில் இந்தியா உள்கட்டமைப்பு உருவாக்கி வருகிறது என்பதை இந்த தடுப்பணையை கொண்டு இந்தியா நிரூபித்துள்ளது. சிந்து நதியின் மீது இதுபோன்ற தடுப்பணைகளை கட்ட லடாக் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை விரைவாக நடந்து வருகிறது.
