சிறு, குறு தொழில் உத்தரவாத கடன் திட்டம்: தமிழகம் பயனடைந்தது வெறும் 7% மட்டுமே

திருப்பூர்: சிறு, குறு தொழில்களுக்கான பிணையமில்லா உத்தரவாத கடன் திட்டத்தில், நாடு முழுதும் 3.05 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு வெறும் 7 சதவீதம் மட்டுமே என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்களுக்கு பிணையமில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தொழில் நஷ்டம் காரணமாக கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன் தொகையில் 75 முதல் 85 சதவீதம் வரை இத்திட்டத்தின் வாயிலாக வங்கிகளுக்கு ஈடுசெய்யப்படுகிறது.

தமிழக அரசு, மாநில தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு நிதியாக 70 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் அதிக நிதியை வழங்கியிருந்தாலும், வங்கிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இங்குள்ள நிறுவனங்களுக்கு எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை என தொழில்துறையினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

வங்கிகளின் ஒத்துழைப்பு இல்லை நாடு முழுதும் இத்திட்டத்தின் கீழ் 27.15 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3.05 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 1.80 லட்சம் விண்ணப்பங்களுக்கு, 21,446 கோடி ரூபாய் மட்டுமே கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. தமிழக அரசு, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். - அழகிய மணவாளன் ‘லகு உத்யோக் பாரதி’ திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர்

நிதி தேவை ஆடை தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது. உத்தரவாத கடன் திட்டம் குறித்து வங்கிகள் அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தகுதியான நிறுவனங்கள் பயன்பெறும். குறு, சிறு நிறுவனங்கள் இத்திட்டத்தை பயன்படுத்தினால், புதிய முதலீடு மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும். - தனஞ்செயன் ஆடிட்டர்

மாநில வாரியாக அனுமதிக்கப்பட்ட கடன் (சதவீதத்தில்) மஹாராஷ்டிரா 13.10 உத்தரபிரதேசம் 10.74 குஜராத் 8.30 தமிழகம் 7.00 கர்நாடகா 7.00

Source link