வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேவேகவுடா பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஆயுள் தண்டனை வழங்கியது. இவர் மீது மேலும் ஏராளமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை
இவர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைச்சாலையில் அணியும் ஆடையின்றி, வழக்கமான ஆடையுடன் போன் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
செல்போன் மற்றும் பென் டிரைவ் பறிமுதல்
அப்போது செல்போன் மற்றும் பென் டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டன. செல்போனை ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, செல்போனில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் பென் டிரைவில் சினிமா படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை டவுன்லோடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரேவண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது போன் என்னுடையது அல்ல. சக கைதிகளும் பயன்படுத்தினர். சுழற்சி அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் போன் மாறிமாறி வரும் எனத் தெரிவித்தார். எந்தவொரு ஆபாச படத்தையும் டவுன்லோடு செய்யவில்லை என்றார்.
பெண் நண்பருடன் பேச்சு
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட குறிப்பேடு ஒன்றில், ரேவண்ணாவின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களின் தொலைபேசி எண்கள் இருந்தன. இடைத்தரகர்கள் மூலமாக குடும்பத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற தொடர்புகளும், ஒரு பெண் நண்பருக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளும் அழைப்புப் பதிவுகளில் (call records) தெரிய வந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையின்போது, அந்தப் பெண் நண்பருடனான தொடர்பை ரேவண்ணா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொலைபேசியின் அழைப்புப் பதிவுகளில் எண்கள் இடம்பெற்றுள்ள நபர்களுக்குக் காவல்துறை விரைவில் சம்மன் அல்லது அறிவிப்புகளை அனுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன், சிம் கார்டு, சார்ஜர், குறிப்பேடு (Notebook) ஆகியவை ஜெயில் சிறைக்குள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் விசாரணைக் கைதியான பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா இருந்த அறையில் இவர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வார்டன் மூலம் செல்போன் கடத்தல்
வார்டன் மூலம் செல்போனை கடத்தி வந்ததாகவும், விசாரணைக் கைதி மூலம் சிம்கார்டு பெற்றதாகவும், பிரதாப் ராய் மற்றும் ரேவண்ணா ஆகியோர் இதை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 8-ந்தேதி இது தொடர்பாக நீதிமன்றத்தில் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றம் 3 நாள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தது. பின்னர் செப்டம்பர் 10-ந்தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
