சிலை கடத்தல் குற்றவாளியை ஜெர்மனிக்கு அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தண்டனை காலம் முடிந்ததும், சிறையிலுள்ள சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திர கபூரை, ஜெர்மனிக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில், தொன்மையான சிலைகள் திருட்டு மற்றும் கடத்தல் வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், 2022 நவ., 1ல் உத்தரவிட்டது. அவர் திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.

சுபாஷ்சந்திர கபூர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 2011 முதல் சிறையில் உள்ளேன். தண்டனைக்காலம் 2022 அக்., 31ல் முடிவடைந்தது. அதையும் தாண்டி என்னை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர். நான் ஜெர்மனியை சேர்ந்தவர். மற்ற நான்கு சிலை கடத்தல் வழக்குகளை நடத்த சட்டப்படி என்னை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி, ஜெர்மன் அரசிடம் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அனுமதி கோரினர்.

அதை ஜெர்மன் அரசு நிராகரித்தது. மேலும் ஆறு வழக்குகளை நடத்த என்னை முறைப்படி இந்திய அரசிடம் ஒப்படைக்க, ஜெர்மன் அரசிடம் போலீசார் அனுமதி கோரினர். அதில், ஜெர்மன் அரசு முடிவெடுக்காததால் நிலுவையில் உள்ளது.

என்னை சிறையிலிருந்து விடுவித்து, சொந்த நாட்டிற்கு அனுப்ப மத்திய, மாநில உள்துறை செயலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, என்.குணசேகரன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரை இரண்டு வாரங்களில் ஜெர்மனி அரசிடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்க, மத்திய உள்துறை செயலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Source link