லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் கார் ரேஸை நேரில் பார்க்க நடிகை த்ரிஷா நேரில் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டிற்கு சென்றுள்ளார். அஜித் குமார் பங்கேற்கும் இந்த கார் ரேஸை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த ரேஸை பார்க்க நடிகை த்ரிஷா நேரில் சென்றுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிற்கு சென்றார். மோட்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். அங்கிருந்த ஊழியர்கள் இது தொடர்பாக விரிவாக விளக்கினர்.
இதற்கிடையே லீ மென்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடிகர் அஜித் குமாரின் அணியும் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது. கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக விஜய் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டுக்கு விஜய் வந்தபோது, அவரை நடிகர் அஜித் குமார் நேரில் சந்தித்து ஆரத்தழுவி வரவேற்றார். அஜித்தை பார்த்ததும் விஜய்யும் அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். விஜய்யுடன் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் அஜித் குமார் ஆரத்தழுவி வரவேற்றார். அஜித்-விஜய் சந்திப்பை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
#Trisha at the Silverstone racing circuit..✌️ Thala-Thalapathy x Trisha.. pic.twitter.com/WkiN0cP0yk
இதற்கிடையே, கார் பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் காணப்பட்டார். குறிப்பாக, அஜித் குமார் கார் ரேஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு த்ரிஷா நேரில் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. மலையாள சினிமா படப்பிடிப்புக்காக நடிகை த்ரிஷா முன்கூட்டியே லண்டனுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அவரும் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டுக்கு கார் ரேஸை பார்வையிட சென்றுள்ளார்.
ரேஸ் தொடங்கும் நேரத்தில், டிராக்கில் அஜித்தின் கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு அருகிலும் விஜய் சென்றார். அங்கு அஜித்தின் காரை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், அஜித்துக்கு கை கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே அவர் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் கொடியசைத்து கார் ரேஸை தொடங்கி வைத்தார்.
