புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் மூத்த தலைவர் ரிது சவுத்ரி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “வெட்கக்கேடு; அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அசாஃபிலா, லாங்ஜு மற்றும் டக்சிங் ஆகிய பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா கூறுகிறார். தளவாடங்களுக்கான கோரிக்கைகள் இருந்தபோதிலும், சீனாவுக்குப் பதிலாக ‘ஜென் ஸி’ தலைமுறைக்கு எதிராக ராணுவம் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன” என குறிப்பிட்டார்.
இது தொடர்பாக ராணுவத்தின் உண்மை சரிப்பார்ப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “2023 அக்டோபர் 27 அன்று ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அப்போதைய மேஜர் ஜெனரல் கிரிஷ் காலியா, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து நடந்த ஊடுருவல் முயற்சிகள் குறித்துப் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதில் அந்த அதிகாரி கூறியதாகப் புனையப்பட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது உண்மையல்ல” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலியான வீடியோவை பரப்பி ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராணுவத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் போலியான ஏஐ வீடியோவைப் பரப்பியதற்காக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது நமது எதிரிகளின் இழிவான செயல்களுக்கு நிகரானது. காங்கிரஸ் கட்சி இந்தியாவின் எதிரிகளுக்காக ஒரு இழிவான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
