சென்னை: திருமண மண்டபங்களில் பண்டிகைக் கால விற்பனைக் கண்காட்சிகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களின்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், பேரூராட்சிகள், கிராமப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்களை, வாடகைக்கு எடுத்து, வெளி மாநிலங்கள் மற்றும் பெருநகரங்களைச் சேர்ந்த சில வணிக நிறுவனங்கள் விற்பனைக் கண்காட்சி நடத்துகின்றன.
அங்கு ரெடிமேட் ஆடைகள், ஜவுளி ரகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை மொத்தமாக குவித்து தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பாரம்பரியமாக வணிகம் செய்யும் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். சுப நிகழ்ச்சிகள், சமூக கூட்டங்களுக்காக மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று இயங்கும் கட்டிடங்கள்தான் திருமண மண்டபங்கள்.
வணிக வளாகங்கள்போல அவற்றை தற்காலிக விற்பனை சந்தையாகப் பயன்படுத்துவது விதிகளுக்கு முரணானது. எனவே, திருமண மண்டபங்களில் வர்த்தக ரீதியான தற்காலிக கண்காட்சிகள், வணிகப் பொருள் விற்பனைக்கு உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை மூலம் அனுமதி வழங்கக் கூடாது.
இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பித்து உத்தர விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
