அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா அதிபர் ஷி ஜின்பிங் இந்த வார இறுதியில் (செப்டம்பர் 12-13) இந்தியா வருகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், புதுடெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்வார் என்று பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகம் தனது இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.
சீன அதிபரின் வருகை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். டெல்லியில் அவர் தங்கும் மத்திய பகுதியில் உள்ள ஹோட்டலில் பெய்ஜிங்கில் இருந்து வந்த பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே தங்களின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டனர் என்றும், இந்திய தரப்பில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இவர்களுடன் இணைந்து பாதுகாப்பை ஒருங்கிணைத்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த 48 மணி நேரப் பயணத்தில் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோருடன் இணையவுள்ளார். வர்த்தகம், உலகப் பொருளாதாரம், மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நடக்கும் போர்கள் வரை பல விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தீவிர விவாதங்கள் நடைபெறவுள்ளன. கடந்த இரு வாரங்களில் புடின் மற்றும் பெசெஷ்கியான் ஆகியோருடன் ஏற்கனவே பேசியுள்ள பிரதமர் மோடி, மீண்டும் அவர்களைச் சந்தித்துப் பேசுவது உற்றுநோக்கப்படும்.
ஷி ஜின்பிங்கின் முந்தைய இந்திய வருகை (அக்டோபர் 2019)
இதற்கு முன்பு அக்டோபர் 2019-இல் இரண்டு நாள் உச்சிமாநாட்டிற்காக ஷி ஜின்பிங் தமிழ்நாடு வந்திருந்தார். சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான 7 மற்றும் 8-ஆம் நூற்றாண்டு பாறைடைவுச் சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. புதுடெல்லியின் அதிகாரப்பூர்வ சூழலிலிருந்து விலகி, தனித்துவமான பண்பாட்டுத் தொடுதலோடு உறவை வளர்க்கும் நோக்கில் இந்த இடம் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை ஊக்குவிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் அமைந்தது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்த சில வாரங்களிலேயே இந்தச் சந்திப்பு நடந்தது என்பதால் இதன் காலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சித்திருந்தது. அதன் பிறகு, ஜூன் 2020-இல் லடாக்கில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் தீவிரமடைந்தது.
2019 சந்திப்பில் நடந்தது என்ன?
வேட்டி மற்றும் வெள்ளைச் சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி, சீன அதிபரை நேரில் வரவேற்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில் மற்றும் இதர நினைவுச் சின்னங்களைச் சுற்றிக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், ரசம் மற்றும் ‘மீன் வறுவல்’ போன்ற தமிழ் உணவு வகைகளுடன் கூடிய விருந்தும் அளிக்கப்பட்டது.
கோவில் உலா மற்றும் உணவிற்கு இடைப்பட்ட நேரத்தில், மோடியும் ஷி ஜின்பிங்கும் சுமார் ஆறு மணி நேரம் வரை ‘இந்தியா-சீனா உறவின் புதிய அத்தியாயம்’ குறித்து விவாதித்தனர். வர்த்தகம், முதலீடு மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். “வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக இரு தலைவர்களும் பேசினர்… இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய நடைமுறை அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது” என்று அன்றைய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டது.
At the invitation of Prime Minister of the Republic of India Narendra Modi, President Xi Jinping will attend the 18th BRICS Summit in New Delhi from September 12 to 13. pic.twitter.com/abKPwOyqRm
— CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) September 10, 2026
இந்தச் சந்திப்பில் பெரிய ஒப்பந்தங்களோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ எதுவும் கையெழுத்தாகவில்லை. அதிகாரப்பூர்வ ஆவணங்களை விடத் தலைவர்களுக்கு இடையே தனிப்பட்ட நல்லுறவை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். சந்திப்பு மிகவும் ‘வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும்’ இருந்ததாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
அதன் பிறகு என்ன நடந்தது?
ஜூன் 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. பல தசாப்தங்களில் இல்லாத அளவிலான இந்த பெரிய ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்களும், எண்ணிக்கையைக் குறிப்பிடாத சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதன் தாக்கம் வன்முறையோடு நிற்கவில்லை. இருநாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவுகள் உறைந்துபோயின. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இரு நாடுகளும் படைகளைக் குவித்தன.
எட்டு மாதங்களுக்குப் பிறகே, பிப்ரவரி 2021-இல் முதற்கட்ட நேர்மறை மாற்றமாக எல்லையிலிருந்து டாங்கிகள் மற்றும் தற்காலிக ராணுவ முகாம்கள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், நவம்பர் 2020-இல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி 40-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்தது போன்ற சில முரண்பாடுகள் தொடர்ந்தன.
அதன் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சுங்கவரி நடவடிக்கைகளால் இந்தியாவும் சீனாவும் இலக்காக்கப்பட்ட சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்டப் பயணங்கள் பரிமாறப்பட்டு உறவில் மெதுவான முன்னேற்றம் ஏற்பட்டது. 2024-இல் லடாக் மோதல் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட சில நாட்களிலேயே மோடியும் ஷி ஜின்பிங்கும் சந்தித்ததைப் போல, இந்த 2026 பிரிக்ஸ் உச்சிமாநாடும் இந்த உறவை மேலும் வலுப்படுத்தக்கூடும்.
இனி என்ன?
இந்த வார இறுதியில் நிகழும் ஷி ஜின்பிங்கின் வருகை, இந்தியா-சீனா உறவின் முன்னேற்றத்திற்கும், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் நிறைந்த தற்போதைய நிச்சயமற்ற உலகச் சூழலில் இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் எவ்வாறு இணைந்து செயல்படப்போகின்றன என்பதற்கும் மிக முக்கியமானது.
அதேவேளையில், புடின் மற்றும் பெசெஷ்கியான் ஆகியோரின் வருகையும் இதில் கூடுதல் சவால்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் சூழல்களுக்கு இடையே இந்தியா சமநிலையைப் பேண வேண்டியுள்ளது.
2019 சந்திப்பு என்பது எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் மோடி-ஷி இடையேயான தனிப்பட்ட வேதியியலை உருவாக்கப் செய்யப்பட்ட முயற்சியாகும். ஆனால் அது எல்லை மோதலால் சில மாதங்களிலேயே சிதைந்தது. தற்போது அதிகப்படியான வர்த்தக இடைவெளி, தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சனை மற்றும் உலகளாவிய சூழல்களுக்கு (டிரம்பின் சுங்கவரிகள், உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய போர்கள்) மத்தியில், பரஸ்பர நம்பிக்கை முழுமையாக இல்லாவிட்டாலும் கூட, இரு தலைவர்களும் இம்முறை எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதை இந்த வார இறுதி நிகழ்வு சோதிக்கும்.
