சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, 1,000 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், ‘சிப்காட்’ நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்கும் பெரிய நிறுவனங்களுக்கு சாலை, தண்ணீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, ‘சிப்காட்’ எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அடுத்து, முக்கிய தொழில் மையமாக கிருஷ்ணகிரி உருவெடுத்துள்ளது. தற்போது, அம்மாவட்டத்தின் ஓசூர், சூளகிரி, பர்கூர், குருபரப்பள்ளியில் ஐந்து தொழில் பூங்காக்கள் உள்ளன.
தற்போது, சூளகிரி அருகே டோரிப்பள்ளியில், 1,000 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது. அங்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், ‘சிப்காட்’ நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
இந்த பூங்காவில் மின் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
