தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டது. வட சென்னையில் மட்டும் 5 இடங்களில் 21 செ.மீ. மேல் மழைப் பதிவாகியது. அதிகபட்சமாகப் பாரி முனையில் 35 செ.மீ. பதிவாகியது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகியது.
இதனால் மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைத்தனர். பின்பு பாதிப்பு குறித்து புகார் அளிக்க மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டது. பொறுப்பு அமைச்சர்களும் சென்னைக்கு திரும்ப முதல்வர் உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமடைந்து வருகிறது. இப்படி புரட்டிப் போட்ட மழைக்குக் மேகவெடிப்பு காரணமா என அனைவருக்கும் கேள்வி இருந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை எனவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் அதன் வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டால் தான் மழை பெய்தது என்றும் விளக்கமளித்திருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் சென்னை மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் ஒலியுடன் கூடிய எச்சரிக்கை மெசேஜ் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மெசேஜில் சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
