சென்னையில் பெய்தது மேகவெடிப்பா, இல்லையா? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, தரமணி, துரைப்பாக்கம், பெருங்குடி, வடசென்னையில் பல பகுதிகளில் மழை பெய்தது. அதிகளவாக பாரிமுனையில் 361 மிமீ மழை பதிவானது.

எதிர்பாராத தருணத்தில் பெய்து தள்ளிய மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும், திடீர் மழைக்கு மேகவெடிப்புதான் காரணம் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தன. மேகவெடிப்பால், வானம் பொத்துக் கொண்டு மழை பெய்ததாகவும் மக்கள் பேச ஆரம்பித்தனர்.

திடீர் கனமழை மேகவெடிப்பால் நிகழ்ந்தது இல்லை என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்து உள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது;

வட தமிழகத்திலும், அதனை ஒட்டிய தென்கடலோர ஆந்திராவிலும் மேலடுக்கு சுழற்சி நிலவியது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டியது. வெப்பச்சலன மேகங்கள் உருவாகி தீவிரம் அடைய, வளி மண்டலத்தில் நிலவிய சாதகமாக சூழல்களே இதற்கு காரணம்.

20 முதல் 30 சதுர கிமீ பரப்பளவில் 1 மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு அதிகமாக மழை பெய்தால் மட்டுமே அது மேகவெடிப்பாகும். வானிலையில் காணப்பட்ட சூழல், மழையின் தன்மை ஆகியவற்றை கணித்து பார்க்கும் போது மேகவெடிப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.

மேகவெடிப்பு என்றால் என்ன?

சென்னைக்கு அருகில் இருக்கும் மேலடுக்கு காற்றின் சுழற்சியால் ஒரு குவிதல் உருவானது. பொதுவாகவே காற்று குவிதல் இருக்கும் தருணங்களில் மேகக்குவியல்கள் காற்றுக்குவியல்களை நோக்கி வரும். அப்போது மழையின் தன்மை மிகையாக கருதப்படும். இதுதான் சென்னையில் நேற்று நிகழ்ந்த வானிலை மாற்றம். நேற்றும், அதற்கு முந்தைய நாளும் சென்னையில் காற்றுக்குவிதல், காற்றுச்சுழற்சி இருந்தது.

ஒரு மணி நேரத்தில் 10 செமீ.க்கு (100மிமீ) மேல் மழை பதிவானால் மட்டுமே மேகவெடிப்பாக கருதப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு தருணம் சென்னையில் நேற்று 3 முதல் 4 மணிநேரம் நீடித்தது. அதுவே மேக வெடிப்பு இல்லை என்பதற்கான காரணமாக அறியலாம்.

பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கடல் வெப்பம் ஒரு காரணம் ஆகும். வங்கக்கடலில் 31 டிகிரி செல்சியஸ் கடல் வெப்பம் இருக்கிறது. அதிக வெப்பம் இருந்தால் அதிக ஈரப்பதமும், அதன் தொடர்ச்சியாக அதிக மழையும் கிடைக்கும். பசிபிக் பெருங்கடல் மட்டுமல்லாது, இந்திய பெருங்கடலிலும் கடலின் வெப்பம் தற்போது அகிகமாகவே இருக்கிறது. இதுவே கனமழை என்ற நிகழ்வை அதிகனமழை நிகழ்வாக மாற்றுகிறது.

Source link