சென்னையில் திருக்குடை சேவாசமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் புதன்கிழமை (செப்.9) நடைபெறுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
நாளை காலை 8 மணி முதல் இந்த ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை, என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதனை இணைக்கும் பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலை ஆகியவற்றைப் மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தலாம்.
தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும். அதேபோல, ஊர்வலம் பயணிக்கும் நேரத்திற்கு ஏற்ப சூளை ரவுண்டானா, ராஜா முத்தையா சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு, கொன்னூர் ஒன் பாயிண்ட் மற்றும் ஓட்டேரி பாலம் ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஊர்வலம் நகரும் போது ஐ.சி.எப். சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாகவும், மேடவாக்கம் டேங்க் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை மற்றும் வி.பி. காலனி சந்திப்பில் இருந்து வி.பி. காலனி (தெற்கு) நோக்கியும் மாற்றி விடப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
