கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி மற்றும் முதலீடுகள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து, லட்சக்கணக்கான ஃபாலோவர்களைப் பெற்றவர் வி. ஹரீஷ். புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயதான இவர், சென்னை அடுத்த முட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் திங்கள்கிழமை இரவு இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், மற்றொரு இன்ஃப்ளூயன்சர் ஆன்லைன் மூலம் செய்த தொல்லைதான் இவரது மரணத்திற்குக் காரணம் என்று குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்துக் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.
‘பைனான்ஸ் வித் ஹரீஷ்’ என்ற சேனலை நடத்தி வந்த இவரது முக்கிய சமூக வலைத்தளக் கணக்குகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து முடக்கப்பட்டன. அதன்பிறகு இவர் புதிதாகத் தொடங்கிய சேனலையும் சிலர் புகார் அளித்து முடக்கச் செய்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முறையான உரிமம் பெறாமல் ஹரீஷ் நிதி ஆலோசனை வழங்குவதாக அவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்நிலையில், ஹரீஷின் தந்தை ஜே. விநாயகம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ஜேசன் சாமுவேல் என்ற மற்றொரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் தனது மகனைத் தொடர்ச்சியாக அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவிட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 18 அன்று ஜேசன் சாமுவேல் வெளியிட்ட வீடியோவில், ஹரீஷ் மக்களை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், ஹரீஷின் சமூக வலைத்தளக் கணக்குகள் அனைத்தையும் முடக்கச் செய்வேன், அவர் இனி புதிய கணக்குகளைத் தொடங்கவே முடியாது என்றும் ஜேசன் சாமுவேல் மிரட்டியதாக ஹரீஷ் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோவில் கூறியுள்ளதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
I am deeply saddened, heavily grieving, shocked and frozen at what has happened and I mourn the loss of life.
I have not cyber-bullied him. I pointed out his lack of license and authority, misrepresentation of license and fraud on SEBI and AMFI where he has not got SEBI RIA for…
— Jason Samuel (@the_jasonsamuel) October 20, 2026
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ள ஜேசன் சாமுவேல், தான் ஹரீஷின் தகுதிகள் குறித்தும், நிதி ஆலோசனை வழங்க அவருக்கு உரிய அனுமதி உள்ளதா என்பது குறித்தும் மட்டுமே கேள்வி எழுப்பியதாகக் கூறினார். ஹரீஷிடம் செபி (SEBI) முறையான உரிமம் இல்லை என்றும், மியூச்சுவல் ஃபண்ட் சங்கப் பதிவிலும் அவர் முறைகேடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். எனினும், ஹரீஷ் இந்த விவகாரத்தால் தற்கொலை செய்து கொள்வார் எனத் தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை
சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதம் எதுவும் சிக்கவில்லை. ஹரீஷின் உடல் உடற்கூறாய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஹரீஷின் தந்தை அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோவை ஆய்வு செய்யவும், டிஜிட்டல் சான்றுகளைப் பாதுகாக்கவும், சமூக வலைத்தளக் கணகுகள் எப்படி முடக்கப்பட்டன என்பது குறித்தும் கனத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குறிப்பு: தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடையாது. உங்களுக்கு மன உளைச்சலோ அல்லது தீவிர மன அழுத்தமோ இருந்தால், சினேகா (Sneha Suicide Prevention Helpline – 044-24640050) அல்லது இதர மனநல உதவி எண்களைத் தொடர்புகொண்டு வழிகாட்டுதலைப் பெறலாம்.
