‘சென்னை முதல் நாகை வரை… நள்ளிரவில் புகுந்த இ.டி அதிகாரிகள்’-தொடரும் மெகா ரெய்டு

தமிழகத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதற்கு நிதியுதவியாக விளங்கும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை கண்டறிய  அமலாக்கத்துறை அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது.

குறிப்பாக மெத்தம்பேட்டமைன் போன்ற கொடிய ரகப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் மூலம் கைமாறிய பல கோடி ரூபாய் ஹவாலா பணம் தொடர்பாக, சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சென்னையின் முக்கியப் பகுதிகளான பெரம்பூர், அண்ணாநகர், சோழவரம் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென் மாநிலங்களில் மட்டும் மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின்  கீழ் பதிவு செய்யப்பட்ட எட்டு வெவ்வேறு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளின் ஆவணங்களின் அடிப்படையில், இந்த சோதனையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.

சென்னையில் நடத்தப்படும் இந்தச் சோதனையில், இலங்கைக்குப் பெரிய அளவில் போதைப்பொருட்களைக் கடத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறையில் உள்ள காசிலிங்கம் என்ற இலங்கைத் தமிழரின் வீடு முக்கிய இலக்காக மாறியுள்ளது. அவர் சிறையில் இருந்தபோதிலும், அவரது சர்வதேச நெட்வொர்க் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

அதேபோல, சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அக்பர் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் ஆவணங்களைச் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். தற்போதைய சோதனையில் பல முக்கிய டிஜிட்டல் சான்றுகள், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சோதனையின் முழுமையான விவரங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link