வாரத்தில் ஐந்து நாள் வங்கி வேலை என்பதை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடர்பான கருத்து வேறுபாடுகளை கண்டித்து, யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 11 (நாளை), வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளில் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள இந்த வங்கி வேலைநிறுத்தம், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக அரசு மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நடைபெறுகிறது. ஒன்பது வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பான யு.எப்.பி.யூ (UFBU), தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த மாதத்தின் பிற்பகுதியிலும் அக்டோபர் மாதத்திலும் மேலும் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் ஏன் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்?
வங்கி ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது வாரத்தில் ஐந்து நாள் வங்கி வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தான். இந்த விவகாரம், 2024 மார்ச் மாதத்தில் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட 12-வது இருதரப்பு ஒப்பந்தம் (12th Bipartite Settlement) மற்றும் 9-வது கூட்டு குறிப்பு (9th Joint Note) ஆகியவற்றுடன் தொடர்புடையது.
அதன்படி, சனிக்கிழமைகள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் புரிந்துணர்வு ஏற்பட்டது. இந்த முன்மொழிவு நிதி அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாக வங்கி ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன. அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டும் வங்கி சங்கங்கள், இந்தத் தாமதத்தை தங்களது தற்போதைய போராட்டத்தின் முக்கியக் காரணமாக முன்வைத்துள்ளன.
பி.எல்.ஐ (PLI) திட்டத்தில் என்ன பிரச்சினை?
2026-ம் ஆண்டுக்கான வங்கி வேலைநிறுத்தத்தின் மற்றொரு முக்கிய காரணம் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (Performance Linked Incentive – PLI) திட்டமாகும். பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்காக ஒருதலைப்பட்சமாகவும் பாரபட்சமாகவும் பி.எல்.ஐ (PLI) அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வங்கி ஊழியர் சங்கங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வங்கி சங்கங்களுக்கும் ஐ.பி.ஏ (IBA)-க்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்படி, பி.எல்.ஐ என்பது சம்பந்தப்பட்ட வங்கியின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், ஸ்கேல் 7 (Scale VII) வரை உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான அமைப்பு இருக்க வேண்டும் என்றும் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போதைய முன்மொழிவில் ஸ்கேல் 4 (Scale IV) மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து அதிகபட்சமாக 365 நாட்களுக்கான தொகை வரை பி.எல்.ஐ வழங்க முடியும் என்றும், ஸ்கேல் 3 (Scale III) மற்றும் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 15 நாட்களுக்கான தொகை மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுவதற்கு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எனவே, திருத்தப்பட்ட பி.எல்.ஐ அமைப்பை திரும்பப் பெற்று, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பி.எல்.ஐ விவகாரத்தில் மத்திய அரசின் தரப்பிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான முன்மொழியப்பட்ட செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதிய மஸ்தூர் சங்கம் தலைமையிலான வங்கி ஊழியர் பிரதிநிதிகள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-26 நிதியாண்டிற்காக 2024 நவம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்ட பி.எல்.ஐ திட்டத்தை அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்படும் என்றும், தற்போதைய இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் கூட்டு குறிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், யு.எப்.பி.யூ (UFBU) ஏற்கனவே அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தால், இந்தியா முழுவதும் வங்கிக் கிளைகளின் நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள், சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன.
எனினும், அனைத்து வங்கி சேவைகளும் முழுமையாக நிறுத்தப்படும் என்று வாடிக்கையாளர்கள் கருத வேண்டியதில்லை. இணைய வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, யு.பி.ஐ (UPI), ஏ.டி.எம். (ATM) மற்றும் பிற தானியங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட சேவைகளின் செயல்பாடு வங்கிக்கு வங்கி மாறுபடலாம். எஸ்.பி.ஐ வங்கி, வாடிக்கையாளர்கள் இணைய வங்கி, யானோ (YONO), மொபைல் வங்கி, யு.பி.ஐ (UPI), ஏ.டி.எம். (ATM) மற்றும் தானியங்கி பணம் வைப்பு மற்றும் பணம் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தம், யு.எப்.பி.யூ அறிவித்துள்ள பல்வேறு போராட்டங்களின் முதல் கட்டமாகும். வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை மேலும் ஒரு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்தால், 2026 அக்டோபர் 26 முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
