மாஸ்கோ: பிரிக்ஸ் மாநாட்டின் முன்னோட்டமாக, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் சந்திக்க உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு செப்.11ம் தேதி நடக்கிறது.
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு செப்.12 மற்றும் செப்.13 ஆகிய தேதிகளில் தலைநகர் டில்லியில் நடக்கிறது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. 4வது முறையாக மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில், உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள், பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந் நிலையில், மாநாட்டுக்கு வரும் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு செப்.11ம் தேதி நடக்க உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளதாவது:
இந்தியாவுடனான உறவுக்கு மாஸ்கோ என்றுமே முக்கியத்துவம் அளிக்கும். இந்திய பிரதமர் மோடியை, அதிபர் புடின் சந்தித்து பேசுவார். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, போதை பொருள் எதிர்ப்பு, அறிவியல், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகள் இடையே உள்ள ஒத்துழைப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
இரு நாடுகளின் தலைவர்களும் இதுகுறித்து பேசுவர். சுகோய் (SU 57) போர் விமான விற்பனை விவகாரமும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும். இந்தியா கோரியுள்ள தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்தும் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
