கும்பகோணம்: கும்பகோணம் அருகே, பட்டீஸ்வரம் திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பு இன்றி மூடப்பட்டுள்ளதாகவும், மழையில் நனையும் அபாயம் உள்ளதாகவும், அமைச்சர் வினோத் ரவிக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இந்நிலையில், நேற்று (அக்.,26) பெய்த மழையால் நெல் மூட்டைகள் பாதுகாப்பு குறித்து, அமைச்சர் வினோத் ரவி பட்டீஸ்வரம் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மூடப்படாமல் உள்ள நெல்மூட்டைகள் குறித்தும், அட்டிகளில் இருந்து சிதறி கிடந்த நெல் மூட்டைகள் மூடப்படாதது குறித்தும் கேட்டார். மேலும், விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து விளைவித்த நெல்மணிகளை பாதுகாக்காமல் வீணடித்து வருகிறீர்கள். நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் அலட்சியமாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்று பணியாளர்களை எச்சரித்தார்.
நேற்று, பட்டீஸ்வரம் சேமிப்பு கிடங்கில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
இந்த பணியின் போது, பல நாட்களாக அடுக்கி இருந்த நெல்மூட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘பட்டீஸ்வரம் சேமிப்பு கிடங்குகளில், 19 ஆயிரத்து 473 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அமைச்சர் வினோத் ரவி உத்தரவில், கடந்த 2 நாட்களாக அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. இதுவரை 444 டன் மூட்டைகள் 30 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால் பணிகள் துரிதப்படுத்தப்படும். லாரிகள் பற்றாகுறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.
