99 லட்சம் வாக்காளர்கள் கர்நாடகாவில் நீக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணியில், 99.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, ஜூன் 30ம் தேதி துவங்கியது. ஆகஸ்ட் 24ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், போலி வாக்காளர்கள், அடையாளம் கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என, 1 கோடியே 7 லட்சத்து 96,339 பேர் நீக்கப்பட்டிருந்தனர்.

பா.ஜ., பூத் ஏஜன்டுகள் சிறுபான்மையின சமூக வாக்காளர்களை நீக்க முயற்சித்ததாக முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டினார். இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகுமார் தலைமையில், அமைச்சர்கள் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன், கடந்த 1ம் தேதி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் அளித்த பேட்டி:

இறுதி வாக்காளர் பட்டியலில், 99 லட்சத்து 32,303 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இறுதியாக, 4 கோடியே 55 லட்சத்து 00,011 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.

இதில், ஆண்கள், 2 கோடியே 25 லட்சத்து 83,107 பேர்; பெண்கள் 2 கோடியே 29 லட்சத்து 14,063 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 2,841 பேர் ஆகும். தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால், உடனடியாக படிவம் 6 சமர்ப்பித்து தங்கள் பெயர்களை இணைத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link