உத்திர பிரதேசம் மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள ரெக்சடியா கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் சஹானி. பாத்திர வியாபாரியான இவர், கடந்த புதன்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த வினோத் சஹானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள கே.ஜி.எம்.யு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சஞ்சய் நிஷாத் லக்னோ மருத்துவமனையின் முன்பு அமர்ந்து சொந்த அரசுக்கு எதிராகவே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் கோண்டா பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலைக்குக் காரணமானவர்களை சுட்டு பிடிக்க வேண்டும்” என்பது போன்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார். அமைச்சரின் தர்ணா போராட்டத்தை அடுத்து, கொலையில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் பணியில் அலட்சியமாக இருந்ததாக ஆய்வாளர் கமல் சங்கர் சதுர்வேதி உள்ளிட்ட 3 காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சொந்த அரசுக்கு எதிரகாகவே கூட்டணியில் மட்டுமல்லாமல் அதிகாரத்திலும் பங்குபெற்றுள்ள அமைச்சர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிகாரிகள் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.
