கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைசர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 29 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில் லடாக்கை சேர்ந்த கல்வியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் கலந்துகொண்டார். அதாவது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமெனவும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தியும் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே சோனம் வாங்சுக்கின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நடைபெற்ற விசாரணையில், சோனம் வாசுங்க்கின் உடல்நிலையை அரசு மருத்துவர் குழு கவனிக்கும் என்றும் அவருக்கு உடல்நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அதற்கு ஒரு தீர்வு காணும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கிடையே சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், காவல்துறையினரால் இன்று (18.07.2026) காலை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுயநினைவுடன் உள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினரை ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனையடுத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அப்ஜித் தீப்கே தாமும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சோனம் வாங்சுக் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சோனம் வாங்சுக் அகிம்சை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவரை ஜந்தர் மந்தரிலிருந்து நீக்கியது தவறானது. வினாத்தாள் கசிவுகள், அதிகரித்து வரும் கல்விச் செலவு, மற்றும் மாணவர் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான பிரச்சினைகளாகும். எவ்வளவு பலத்தைப் பயன்படுத்தினாலும், இந்திய மாணவர்களையும், அவர்கள் மீது அன்பு செலுத்தி நம்பிக்கை வைத்துள்ள நம்மையும், இந்தப் பிரச்சினைகளை எழுப்புவதிலிருந்து தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
