சென்னை: “சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் – ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க அரசு! நாளை திமுக அரசு நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க அரசுக்கான Wake-up call” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி சார்பில் நாளை, தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம் – ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க அரசு! நாளை திமுக அரசு நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க அரசுக்கான Wake-up call! முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள்- குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் நாளை (அக்.31) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.
ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 31.10.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுபவர்கள் விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வடக்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கனிமொழி எம்.பி கண்டன உரையாற்றுகிறார்!” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
