சென்னை: தேவர் ஜெயந்தி என்றாலே, வருடா வருடம் பசும்பொன் கிராமம் அரசியல் தலைவர்களின் வருகையால் களைகட்டும்… முதலமைச்சர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்துவது பல வருடங்களாகத் தொடரும் வழக்கமாகும்.. அந்தவகையில், இந்த ஆண்டு முதலமைச்சர் விஜய்யும் பசும்பொன் செல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால், கடைசி நேரத்தில் அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. அப்படி விஜய் பசும்பொன் செல்லாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?
எம்ஜிஆர். காலத்திலிருந்தே தமிழக முதலமைச்சர்கள் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இது தென் மாவட்ட அரசியலிலும், தேவர் சமூக மக்களுடனான உறவிலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எனவே முதலமைச்சராக இருக்கும் விஜய்யும் பசும்பொன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அங்கு ஹெலிபேட் அமைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், பிறகு விஜய் பசும்பொன் செல்லாமல், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
பசும்பொன்னில் ஹெலிபேட் அமைக்கும் பணி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வருகைக்காக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஆர். நிர்மல்குமார் விளக்கமும் அளித்திருந்தார்.
விஜய் பசும்பொன் செல்லாததற்கு முதலில் சொல்லப்படும் காரணம் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை சிக்கல்கள்தான்.
பசும்பொன் என்பது மிகக் குறுகிய இடவசதி கொண்ட கிராமம். தேவர் குருபூஜையின்போது தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரது வருகையும் இருக்கும். இதனால் ஏற்கனவே அந்தப் பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது போலீசுக்கு சவாலான ஒன்றாக இருக்கும்.
அதுமட்டுமல்ல, விஜய் அங்கு சென்றால் அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் திரள்வார்கள். நடிகராக இருந்த காலத்திலேயே விஜய்யைக் காண மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்போது அவர் முதலமைச்சராக இருப்பதால் அந்தக் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அப்படி ஒரு சூழலில், ஏற்கனவே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பசும்பொன்னில் முதலமைச்சருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொண்டே விஜய்யின் பயணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்ற ஒரு பார்வை உள்ளது.
மேலும், முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு, பாதுகாப்புப் படையினரின் ஏற்பாடுகள், பொதுமக்களின் நடமாட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். இதுவும் டிராபிக் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பாதுகாப்பு கருதி இப்படியான முடிவை விஜய் எடுத்திரக்கலாம் என்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான உளவுத்துறை அறிக்கையில், தென் மாவட்டங்களில் தவெக கணிசமான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தேவர் குருபூஜையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்காவிட்டால் அப்பகுதி மக்களிடம் அதிருப்தி ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டதாம். .
அதுமட்டுமல்ல, ஏற்கனவே வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக அறிவித்தது, தென் மாவட்ட பிரச்சாரங்களின்போது முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது போன்றவை தவெகவுக்கு அப்பகுதியில் ஆதரவைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அப்படியிருக்கும்போது, பசும்பொன் குருபூஜையில் விஜய் பங்கேற்காவிட்டால் அடுத்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்றெல்லாம் உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டதாம்.
எனினும், இந்த ஆண்டு விஜய் பசும்பொன் செல்லாத நிலையில், இது தென் மாவட்ட அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், தேவர் ஜெயந்தி என்பது ஒரு நினைவு நாள் நிகழ்வு மட்டுமல்ல. தென் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் தேவர் ஜெயந்தி நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. தேர்தல் நேரங்களில் இந்த சமூகத்தின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பசும்பொன் வருகையும் கவனிக்கப்படுகிறது.
கடந்த காலத்திலும் இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சராக இருந்தபோது உட்கட்சிப் பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாமல் இருந்தார். அப்போது தென் மாவட்ட மக்களிடம் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. தற்போது விஜய்யும் பசும்பொன் செல்லாத நிலையில், அவருக்கும் அதேபோன்ற அரசியல் பாதிப்பு ஏற்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் பசும்பொன் சென்றிருந்தால், அது தென் மாவட்ட மக்களிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆனால், அவர் பசும்பொன் செல்லாமல் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்த முடிவு தென் மாவட்ட அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
தேவர் குருபூஜையில் முதலமைச்சர் பங்கேற்பது தொடர்பாகவும் பல்வேறு அரசியல் கணக்குகள் இருந்திருக்கலாம். தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்திக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதேபோல் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. எனவே, தேவர் குருபூஜையில் பங்கேற்றால் மற்றொரு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழலாம் என்பதையும் கட்சித் தலைமை கணக்கில் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம், பயண ஏற்பாடுகளில் உள்ள சிக்கல்கள், அரசியல் காரணங்கள் என விஜய் பசும்பொன் செல்லாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆனால், அவர் பசும்பொன் செல்லாததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் வெளியாகவில்லை. இதனால் விஜய்யின் முடிவு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..!!
