நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு பயணிகளுக்கு குட் நியூஸ்: மெட்ரோ ரயில் நீட்டிக்க திட்டம்; டெண்டர் கோரிய நிர்வாகம்
இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வியாழக்கிழமை ரிலீஸானது. படத்தை முதலமைச்சர் விஜய் திரையரங்கிற்கு சென்று பார்த்தார். அதேபோல், த.வெ.க அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கொண்டாடினர். இதில், சில அமைச்சர்கள் ஆனந்த கண்ணீர் உடன் திரைப்படத்தை பார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
போராட்டக்காரர்கள் அதிருப்தி
ஒரு பக்கம் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் முதலமைச்சர் விஜய் ’ஜனநாயகன்’ படம் பார்க்க சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளானது. மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடிகை சனம் ஷெட்டி இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “இது மாணவர்களின் போராட்டம். இங்கு சிலர் பேசிய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்கள் தான் ஜோக்கர்கள், நாங்கள் அல்ல. நான் விஜயின் தீவிர ரசிகை. நேற்று ‘ஜனநாயகன்’ படம் பார்த்துவிட்டு வந்தேன்” என்று கூறினார். அவரது பேச்சுக்கு போராட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்திய நிலையில், “போய்விடுங்கள்” என்று போராட்டக்காரர்கள் கூறியதாக தெரிகிறது.
சனம் ஷெட்டி அதிருப்தி
தொடர்ந்து எதிர்ப்பு நீடித்ததால் சனம் ஷெட்டி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, ” கூப்பிட்டு வைத்து படத்தை பார்த்ததால் ஜோக்கர் என்று சொல்கிறார்கள். நான் ஒரு நாள் ஒரு படத்தை பார்த்தால் ஜோக்கரா? வெற்றி மாறன் உட்கார்ந்து இருக்கிறாரே. அவர் எத்தனை படங்கள் எடுத்துள்ளார். அவரையும் ஜோக்கர் என்றுதான் சொல்வார்களா?
நான் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு என்னை வெளியேறச் சொன்னார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலியான போராட்டம். இந்த மேடையை அரசியல் அஜெண்டாவுக்காக பயன்படுத்த யாராக இருந்தாலும் நான் அனுமதிக்கமாட்டேன். ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஜனநாயகத்திற்காக அவர்கள் போராடவில்லை. அவுங்க ஏஜெண்டா வைத்துதான் போராடுகிறார்கள். இந்த வலையில் வீழ்ந்து விடாதீர்கள். என்னோட தனிப்பட்ட கருத்துதான் நான் பேசுவேன். பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்காத இவர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்களா?” என்றார்.
