ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இம்மார்ட்டல்’. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படம் ஃபேண்டஸி கலந்த ஒரு த்ரில்லர் படமாக கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது.
ஒரே வீட்டில் பங்கு தாரர்களாக வாடகைக்கு வசிக்கும் ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் காதலித்து வரும் சூழலில் அக்காதல் ஜிவி பிரகாஷை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுக்கிறது. அதற்கு காரணம் தேடும் ஜிவி பிரகாஷ் பெரிய கொடிய மிருகத்தை சந்திக்கிறார். பின்பு அந்த மிருகம் தான் கயாடு லோஹராக உருமாறி தன்னை ஆட்கொள்ள நினைக்கிறது என்பதை உணர்ந்த அவர் அங்கிருந்து தப்பித்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. இந்த வித்தியாசமான கதைக்களம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு புதிய கடிகாரத்தையும் யமஹா ஆர்.எக்ஸ்.100 வாகனத்தையும் பரிசாக வழங்கியுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பாராத ஜிவி பிரகாஷ் பரிசை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்.
