ஜி.எஸ்.எல்.வி - எப் 17 இஓஎஸ்-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து, இன்று அதிகாலை 2:55 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் வாயிலாக, இ.ஓ.எஸ் - 05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

18 நிமிடங்கள், 34 வினாடிகள் பயணித்த அது, ராக்கெட்டிலிருந்து, மூன்று நிலைகளைக் கடந்து விடுபட்டது. அதிகாலை, 3:14 மணிக்கு, புவி வட்டப்பாதையை நோக்கி, 19.8 டிகிரி சாய்வுடன், 36,000 கி.மீ., உயரத்தில் பயணித்தது.

இந்தியாவால் ஏவப்பட்ட, முதல் நிகழ்நேர படமெடுக்கும் வசதி உள்ள, புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இது, இந்தியா முழுமையையும் மிகத்துல்லியமாக படமெடுத்து, உடனுக்குடன் அனுப்பும்.

சிறப்பம்சங்கள்:

* இந்த ஏவுதலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் எடை 420.5 டன், உயரம் 51.7 மீட்டர். இது, இஸ்ரோவின் 19வது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்.

* 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில் மேல் நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* சுமார் 18 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, செயற்கைக்கோள் பூமிக்கு மேலே சுமார் 36,000 கி.மீ உயரத்தில் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இ.ஓ.எஸ் - 05 செயற்கைக்கோளின் முக்கிய நோக்கங்கள்

இந்த செயற்கைக்கோள், இஸ்ரோவால், ‘வானத்தின் கண்’ என செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பூமி அமைப்பைத் தொடர்ந்து கண்காணிக்கும் திறன் கொண்டது. அதனால், வெள்ளம், புயல், மேகவெடிப்பு, இடி-மின்னல் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை அளிக்க உதவும்.

விவசாயம், வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

Source link