டெல்லி: இந்தியா தலைமையில் 18வது BRICS உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியுள்ள நிலையில், உலகின் முக்கிய தலைவர்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர். இதற்கிடையே இப்போது பாரத் மண்டபத்தில் இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இப்போது சர்வதேச அளவில் மிக முக்கியமான ஒரு அமைப்பாக பிரிக்ஸ் அமைப்பு மாறியிருக்கிறது. 11 நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தாண்டு இந்தியாவிடம் இருக்கிறது. இதனால் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. டெல்லியில் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியமானதாக மாறியுள்ளது. சர்வதேச மோதல்கள், வர்த்தக பதற்றங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த பிரிக்ஸ் மாநாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகை அமைந்துள்ளது. டெல்லி பாலம் விமானப்படை நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது. கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் டெல்லிக்கு வந்துள்ள நிலையில், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி வந்த சிறிது நேரத்திலேயே சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பை சீன அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
