‘ஜென் ஸி’ இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்: நெல்லையில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.வி அர்லேகர் பேச்சு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்றைய ‘ஜென் ஸி’ (Gen Z) தலைமுறை இளைஞர்களை பலர் தவறாக வழிநடத்துவதாகக் வேதனை தெரிவித்தார். மேலும் அரங்கில் போதிய இடவசதி இல்லாததால் வெளியே நின்ற மாணவர்களிடம் மன்னிப்பு கோரிய அவர், அடுத்த முறை பெரிய அரங்கில் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  பேசுகையில், “பட்டம் பெறும் அனைத்து மாணவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், உங்கள் அனைவரையும் இந்த அரங்கிற்குள் அமர வைக்க இயலவில்லை” என்றும் “உங்களில் சிலர் அரங்கிற்கு வெளியே இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.” என்று மாணவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

தொடர்ந்து பேசிய தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் , “உங்கள் அனைவரையும் இங்கே அமர வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகிய எனது பொறுப்பாகும். எனவே, மதிப்பிற்குரிய துணைவேந்தரிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்: அடுத்த முறை நாம் இன்னும் பெரிய அரங்கைப் பயன்படுத்த வேண்டும்.” என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

‘ஜென் ஸி’ தலைமுறையினர் குறித்துப் பேசிய தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “நீங்கள் அனைவரும் நம் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும்கூட. நமது இளம் தலைமுறையைப் பற்றி மக்கள் தவறாகப் பேசுகிறார்கள். இக்காலத்தில் அவர்களை ‘ஜென் ஸி’ என்று அழைக்கும் போக்குகூட காணப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை நாம் பார்த்தோம்; அங்குள்ள தலைமுறையினரையும், எனது திறமையான இளம் மாணவர்களான உங்களையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

‘ஜென் ஸி’ (Genz) இளைஞர்களை பலர் தவறாக வழி நடத்துகிறார்கள். ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களுக்கும் இங்குள்ள இளைஞர்களுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அமைதியாக இந்த பட்டமளிப்பு விழா நடந்து முடிந்துள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு என தனி கலாச்சாரம் உள்ளது” என்று பேசினார்.

மேலும், “பட்டம் பெறுவது வரையிலும், உங்கள் பொறுமைக்கான ஒரு சோதனையாக இருந்தது. நீங்கள் நீண்ட காலமாக இதற்காகக் காத்திருந்தீர்கள். பட்டத்தை வேந்தர் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறானதா? நிச்சயமாக இல்லை. அது உங்கள் உரிமை. நீங்கள் அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். எனவே, வேந்தரால் நீங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. உங்கள் முயற்சிகளை நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

இந்த விழாவில் பங்கேற்கும் உங்கள் எண்ணிக்கை சுமார் 800 முதல் 900 வரை இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களை இங்கே வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம்; உங்களில் பலர் என்னிடம் ‘வணக்கம்’ என்றீர்கள்.

சிலர், ‘உங்கள் கைகளால் பட்டம் பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ எனத் தெரிவித்தீர்கள். இதை அனைவரும் பாராட்ட வேண்டும். இதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையானவை மற்றும் நீங்கள் விரும்புபவை அனைத்தையும் உங்களுக்கு வழங்குவதே எனது முக்கிய கடமையாகும். உங்களைச் சந்தித்து, உங்களைப் புரிந்துகொள்வதே எனது நோக்கம்.” என்று கூறினார்.

முன்னதாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என்றும், மற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பட்டம் வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்களுக்கு ஆளுநரே பட்டம் வழங்க வேண்டுமெனக் கூறி அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பின்னர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் ஆளுநர் அர்லேகரே பட்டங்களை வழக்குவார் என்று ஆளுநரின் செயலர் சஜன் சிங் சவான் அறிவித்தார். 

இதையடுத்து, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது நடைமுறையில் உள்ள நிலையில், இவ்விழாவில் மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது புதிய சலசலப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link