ஜெயலலிதா காலத்தில் சி.எம் செல்; நீலகிரி கலெக்டராக அதிரடி; இப்போது பள்ளிக் கல்வித் துறை: யார் இந்த இன்னசென்ட் திவ்யா?

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பது வழக்கமான நடவடிக்கை தான் என்றாலும் கூட, ஒருசில பணி மாற்றங்கள் சுவாரஸ்யமான தகவலகள் இருக்கும். அந்த வகையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள இன்னசென்ட் திவ்யா குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் நேற்று இரவு 20-க்கு அதிகமான பணியிட மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிவித்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் செயல்பட்டு வருகிறார். அவரது மேலான்மையின் கீழ் பணியாற்றும் வகையில், இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதிரடிக்கு பெயர் பெற்றவர் தான் இன்னசென்ட் திவ்யா. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சி.எம் செல் அதிகாரியாக இருந்தார். அந்த காலகட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களை சிறப்பு கவனம் கொடுத்து தீர்வு காண வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவு. அதற்கு ஏற்ப பொதுமக்களின் அதிகப்படியான மனுக்களுக்கு துரிதமாக தீர்வு காணும் அதிகாரியாக இருந்தார். 

அந்த வகையில் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர். சி.எம் செல் எனப்படும் முதல் அமைச்சரின் தனிப் பிரிவு அதிகாரியாக பணியாற்றினார். நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராகவும் செயல்பட்ட இவர், தனது நிர்வாகத்தில் பல அதிரடியாக முடிவுகளை எடுத்து நீலகிரி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். அவர்களின் நம்பிக்கையாகவும் இன்னசென்ட் திவ்யா திகழ்ந்தார், யானை வழித்தடங்களில் இருந்த ரெசார்ட்களை நீதிமன்ற அனுமதியுடன் அகற்றியவர். 

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு தீவிரமாக செயல்படுவதற்கு முன்பே, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு முதல் முயற்சியை எடுத்திருந்தாார், இவரின் அதிரடி நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு மாஃபியா கும்பல்கள் இவருக்கு எதிராக செயல்பட்டதாகவும் தகவல்கள் உள்ளது. ஆனாலும் நீதிமன்றத்தின் மூலம் தனது மக்கள் பணியை போராடி செய்துகொண்டு வந்தவர் தான் இன்னசென்ட் திவ்யா. 

உண்மையில் இவர் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டது வரவேற்க வேண்டிய விஷயம். முதல்வர் விஜய், சரியாக முடிவை எடுத்திருக்கிறார் என்று இணையத்தில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source link