இயக்குநர் நானி இயக்கத்தில் லியோ சிவகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘டெலிவரி பாய்’. ஏஎஸ்ஏஎஸ்ஐ(ASASI) கிரியேஷன்ஸ் மற்றும் சண்டி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது தள்ளிச் சென்றுள்ளது. இதற்கான காரணத்தையும் நடிகர் லியோ சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தலைவர் தரிசனம் தர்ற நேரத்தில்… நம்ம டெலிவரி பாய் வேலையைத் தள்ளி வைக்கலாம், தப்பே இல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அக்டோபர் 23 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த நமது டெலிவரி பாய் திரைப்படத்தின் வெளியீட்டை நவம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றியுள்ளோம்.
சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உள்ளது. பல நேரங்களில், நம் டெலிவரி பாய் படத்தைப் போலவே பல சிறிய படங்களும், பெரிய படங்களோடு வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், ஜெயிலர் 2 வெறும் படம் மட்டுமல்ல, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு திருவிழாக் கொண்டாட்டம். தமிழ் ரசிகர்கள் இதுவரை ஏங்கிக் கொண்டிருந்த மாபெரும் இண்டஸ்ட்ரியல் ஹிட் படம். ஜெயிலர் 2 திரைப்படம் நம் தமிழ் சினிமாவை இந்திய அளவில் வணிக ரீதியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தத் தருணத்தில், நம் டெலிவரி பாய் படத்தை வெளியிட்டு அதன் வெற்றிக்காகக் காத்திருப்பதைவிட, தலைவரின் இந்த வெற்றியை ரசிகர்களோடு ரசிகர்களாகக் கொண்டாடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறோம்.
தலைவரைக் கொண்டாடுவதன் மூலம், தமிழ் சினிமாவைக் கொண்டாடுவோம். எங்களது டெலிவரி பாய் திரைப்படம், வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் உங்களைச் சந்திக்க வருகிறது. இந்த முடிவைத் திரை ரசிகர்களும், திரையுலக நண்பர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் புரிந்துகொண்டு ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம். தலைவர் படம் ஒரு கொண்டாட்டம்.. டெலிவரி பாய் நம் கனவு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
