தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, பல்லாவரம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான இ. கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016 முதல் 10 ஆண்டுகள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளதாகவும், 45 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் கழகப் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“எனது மூத்த மகன் ஆண்டோ மதிவாணன், எனது விருப்பத்திற்கு மாறாக பெசன்ட் நகரைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் இரண்டாவது மகள் மெர்லினா அன் என்பவரைக் காதலித்து வந்ததால், கடந்த 20.01.2017 அன்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் திருவான்மியூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். அந்த வீட்டிற்கு நிகழ்ச்சிகளுக்காக நான் இரண்டு முறை மட்டுமே சென்று வந்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இந்த நிலையில், அந்த வீட்டில் பணியாற்றிய ரேகா என்ற பணிப்பெண்ணை மெர்லினா துன்புறுத்தியதாக 16.01.2024 அன்று தொலைக்காட்சியின் மூலமே நான் அறிந்துகொண்டேன். மறுநாளே (17.01.2024) திருவான்மியூர் காவல் நிலைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் சென்று வாக்குமூலம் பெற்று, 18.01.2024 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR எண்: 15/2024) பதிவு செய்தனர்.
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, ஊடகங்களில் செய்தி வந்த பிறகே 20.01.2024 அன்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதாகவும், ஐந்து நாட்கள் கழித்து 26.01.2024 அன்றுதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் உண்மைக்கு மாறான தகவலைப் பதிவு செய்துள்ளார்.
காவல்துறை 18.01.2024 அன்றே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டது. 24.01.2024 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிமன்றத்தில் 7 நாட்களுக்குள் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், காவல்துறையினர் 25.01.2024 அன்றே பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே இருவரையும் கைது செய்தனர். இந்த தகவல்களை எல்லாம் மறைத்து முதலமைச்சர் தவறான தகவலை சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மெர்லினா அன் யார்?
எனக்கும் மெர்லினா அன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மெர்லினா அன்னும், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் மருமகளான மார்சியா அன்னும் உடன்பிறந்த சகோதரிகள். இதன் காரணமாக, சபாநாயகர் குடும்பத்துடன் மெர்லினா அன் மிக நெருக்கமாக உள்ளார்.
லாட்டரி மார்ட்டினின் மனைவியும், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் அவர்களின் உறவினர் எனக் கூறிக்கொண்டு, அவருக்கு உதவியாளர் போல மெர்லினா அன் தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களிலும் பகிரங்கமாகப் பதிவிட்டு வருகிறார்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் என்னை இதனுடன் தொடர்புபடுத்தி உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததிலும், அதைத் தொடர்ந்து துரிதமாகக் கைது நடவடிக்கை எடுத்ததிலும் திமுக ஆட்சியில் காவல்துறை எந்தவித தாமதமும் இன்றி நடுநிலையோடு செயல்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இ. கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
