சென்னை அம்பத்தூர் அருகே அமைந்துள்ள சூரப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஊழியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதே பாரில் சசிகுமார் என்பவரும் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில், சசிகுமார் பாட்டிலை கொண்டு சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், சசிகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, வழக்கம்போல் பகல் 12 மணியளவில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட பின்னர், மதுபானம் வாங்குவதற்காகவும் பாருக்கு வந்தவர்களும் அங்கு கொலை செய்யப்பட்ட நிலையில் சீனிவாசன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சீனிவாசனை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் சக ஊழியர் சசிகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சசிகுமாரை புதூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சக ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சூரப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
