டாஸ்மாக் வழக்கு; செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்!

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இந்த வழக்கின் ஒரு பகுதியாக சென்னை, கரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, உதகமண்டலம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 41 இடங்களில் இன்று (29.07.2026) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம், லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் விசாரணை நடத்தினர்.

அதன்படி சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். விசாரணையின் போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் ஒரு பெட்டியுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜியும், இரண்டாவது குற்றவாளியாக ஐஏஎஸ் அதிகாரி விசாகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளான ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் என செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

Source link