மீண்டும் போராட்டம்? பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த கரப்பான் பூச்சி

டெல்லியில் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத்தை ’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்துக் கூட்டு அமைப்பை உருவாக்கும் ஒரு முயற்சியாக, சிஜேபி அமைப்பினர் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பில், சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா மற்றும் பிற தலைவர்களுடன், ராகேஷ் திகாயத் மற்றும் பாரதிய கிசான் யூனியன் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.  

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக, ஒருங்கிணைந்த கூட்டணியை உருவாக்க விரும்புவதாக சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா தெரிவித்தார். மேலும், “எங்கள் விவசாய சகோதரர்களும், இந்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து மோடி அரசை எல்லாப் பக்கங்களிலிருந்தும் முற்றுகையிடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.  

நீட் போராட்டம் குறித்துப் பேசிய ரன்கா, ”போராட்டத்தின் போது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பீகார், ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கம்  உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கக்கூடும் என்றும் ஒன்றிய அரசை சிஜேபி எச்சரித்துள்ளது.  

Source link