சென்னை மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், இன்று (ஜூலை 29) மாலை 4 மணி அளவில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். இதற்காகச் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணாசாலை வந்த முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் (ஓமந்தூரார்) மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்தார்.
Chief Minister C. Joseph Vijay purchased a ticket to travel on the Chennai Metro Rail. pic.twitter.com/Mj9hm8jQUn
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) July 29, 2026
நந்தனத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய், அங்குள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்றார். அங்கு அரச அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு அங்கிருந்து காரில் கிண்டி கத்திப்பாரா சென்ற முதலமைச்சர், அங்கு பூந்தமல்லி ரோட்டில் நடைபெற்று வரும் சவாலான இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிண்டியிலிருந்து சாலை வழியாகப் போரூர் சென்றார். சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர் – பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரயிலில் (Driverless Metro) ஏறி பூந்தமல்லி வரை பயணம் செய்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் அதே ஆளில்லா ரயிலில் போரூர் வரை பயணித்து, போரூரில் இறங்கி கார் மூலம் தனது வீட்டிற்குத் திரும்புகிறார். விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை ஒட்டி, பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்புக்காகவும் ஏராளமான போலீசார் வழிநெடுகிலும் குவிக்கப்பட்டனர்.
