அதன்படி, மக்களவையில் வினாத்தாள் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது, போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை வன்முறைச் சம்பவம் நிகழ்த்தியதைச் சுட்டிக்காட்டி, மாணவர்கள் என்ன பயங்கரவாதிகளா? என்று பாஜக அரசைக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”புதியதாகத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதைக் கடுமையாக விமர்சித்தார். இது குறித்துப் பேசுகையில், புதிய குழுக்களை அமைப்பது மட்டும் பலனளிக்காது. கடந்த 2024 ஆம் ஆண்டு வினாத்தாள் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதே போன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அளித்த பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய குழுவில் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் (தபன் தேகா), ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர் (நந்தன் நிலேகனி) மற்றும் ஒரு ‘மாட்டுக் கோமிய நிபுணர்’ (காமகோடி) ஆகியோர் உள்ளனர். இவர்களுக்குக் கல்வியைப் பற்றி என்ன தெரியும்?” என்று விமர்சித்திருந்தார்.
இதில், பிரியங்கா காந்தி மாட்டுக் கோமிய நிபுணர் என காமகோடியின் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். சென்னை ஐஐடி இயக்குநர் மற்றும் பேராசிரியர் வி.காமகோடியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் அரியானா மாநில கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், 2021ம் ஆண்டு நடத்திய ஆய்வுகள் உட்பட 5 அறிவியல் கட்டுரைகளை மேற்கோள் காட்டி பசுவின் சிறுநீரில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு உள்ளிட்ட கிருமி நாசினி குணங்கள் இருப்பதாகப் பேசி இருந்தார். இதனைச் சுட்டிக்காட்டியே பிரியங்கா காந்தி சூசகமாகப் பேசியிருந்தார் என்று கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தியின் இந்த பேச்சுக்கு, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
