டிஜிட்டல் அரெஸ்ட், இணைய மோசடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நமது டில்லி நிருபர்

இணைய மோசடி செய்யத் தங்களின் நிறுவன வங்கிக் கணக்குகளை ‘மியூல் அக்கவுண்ட்’ ஆகப் பயன்படுத்த அனுமதித்ததாக, இருவர் மீது 12 மாநிலங்களில் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தங்களின் வசதிக்காக இந்த அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

இன்று (அக்டோபர் 28) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:

* இணைய நிதி மோசடி மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற குற்றங்கள் டிஜிட்டல் கொள்ளை; இந்த மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளை விசாரணைக் காலத்திற்கு முன்பே தண்டிக்க சட்டத்தில் இடமிருந்தால், அதையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.

* குற்றவாளிகளின் வசதியை விட, பணத்தை இழந்த பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளும், பல்வேறு மாநில போலீசாரின் விசாரணைச் சுதந்திரமுமே எங்களுக்கு முக்கியம்.

* வீடியோ கால் மூலம் மக்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்பது சாதாரண மிரட்டல் குற்றமல்ல; ஓய்வூதியம் பெறும் முதியவர்களைக் குறிவைத்து, அவர்களின் வாழ்நாள் சேமிப்பைக் கொள்ளையடிக்கும் மோசடி கும்பல்களை இரக்கமின்றி ஒடுக்க வேண்டும்.

* ஒரே இடத்திற்கு வழக்கை மாற்றினால் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பாதிக்கப்பட்ட முதியவர்கள் டில்லிக்கு அலைக்கழிக்கப்படுவார்கள்; இதற்கு அனுமதி தர முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு மனுதாரர்கள் தங்களது வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

Source link