சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமறைவாக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமாருடன் கூட்டு சேர்ந்து, பண மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, சென்னை தொழில் அதிபர் சண்முகபிரியா, 52, என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக, முதலில் தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், 58, கைது செய்யப்பட்டார். பின், அவரது கூட்டாளிகள் இருவர் கைதாகினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டது, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார், 48, மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், 48, என்பதும் தெரியவந்தது.
இவர்களில், அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துகுமார் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே, அன்பில் மகேஷ், அவரது உதவியாளர் பிரகாஷ், அருண்பிரகாஷ், வாலாடி கார்த்திக் மற்றும் முத்துகுமாரின் உறவினர்கள் சரவணன், ரமேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இவற்றை ஆய்வு செய்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சண்முகபிரியா என்பவர், அன்பில் மகேஷ் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்ததும், முத்துகுமார் வாயிலாக இவருக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சண்முகபிரியா குறித்து, போலீசார் விசாரித்தனர். அவர் ஆயத்த ஆடைகள் மொத்த விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெருங்குடியில் உள்ள, ராம் ராகஸ்ரீ வில்லாஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சண்முகபிரியாவின் வீட்டில், நேற்று நான்கு மணி நேரம், போலீசார் சோதனை நடத்தினர்.
அதேபோல, நீலாங்கரை, அபிராமபுரம் பசுமை வழி சாலையில் உள்ள, அவரது வீடுகளிலும் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமாரின் முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
