'டிஜிட்டல்' தளத்திலும் சிறந்து விளங்கி உலக தமிழ் மக்களை இணைக்கும் 'தினமலர்' :எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பாராட்டு

சென்னை: இணையதளம் மற்றும் செயலி வழியாக செய்திகள் வழங்கி, உலக தமிழ் மக்களை, ‘தினமலர்’ இணைத்திருப்பதாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி தெரிவித்தார்.

தினமலர் நாளிதழ் பவள விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி பேசியதாவது:

திருவிதாங்கூர் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்காக, 1951ம் ஆண்டு செப்., 6ம் தேதி, தினமலர் நாளிதழ் தொடங்கப்பட்டது.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவுடன், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரி, நெல்லை உட்பட, பல முக்கிய நகரங்களில் இருந்து, தனித்தனி பதிப்புகளாக அச்சிடப்பட்டு தரம் வாய்ந்த செய்திகளை, தினமலர் வழங்கி வருகிறது.

அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம் என உலக நிகழ்வுகளை, மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில், தினமலர் முக்கிய பங்கு வகிக்கிறது. அச்சு ஊடகம் மட்டுமின்றி, ‘டிஜிட்டல்’ தளத்திலும், பிரத்யேக செயலி வழியிலும், உலக தமிழ் மக்களை செய்திகளால் இணைக்கிறது.

மேலும், மாணவர்களுக்கான, ‘பட்டம்’ — குழந்தைகளுக்கான, ‘சிறுவர் மலர்’ – வாராந்திர ‘வாரமலர்’ – ‘ஆன்மிக மலர்’ போன்ற பயனுள்ள இணைப்பு இதழ்களுடன், முழுமையான குடும்ப நாளிதழாக விளங்கி வருகிறது.

புகழ்பெற்ற தினமலர் நாளிதழின் பவள விழாவை, தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, பல்கலை வேந்தர் பாரிவேந்தர் சார்பிலும், பல்கலை சார்பிலும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link