நமது டில்லி நிருபர்
டில்லியில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரை மூன்று மாத காலத்திற்கு போலீஸ் கமிஷனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு டில்லியில் போராட்டத்தை துவக்கியது. 20 நாட்களாக அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த இந்த போராட்டம் நேற்று முன்தினம் வன்முறையாக வெடித்தது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்லிமென்டை நோக்கி செல்லுங்கள் என்று அந்த கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே அறிவுறுத்தினார். இதையடுத்து பல்லாயிரக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் பார்லியை நோக்கி ஓடத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்த போலீசாருக்கும் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போதும் போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் நடத்தும் இளைஞர்களை, தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் எந்த வித விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்க, டில்லி போலீஸ் கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது!
இந்த அதிகாரம் வரும் அக்டோபர் 18ம் தேதி வரை மூன்று மாத காலத்திற்கு, டில்லி துணைநிலை கவர்னர் அங்கீகாரம் அளித்துள்ளார். டில்லியில் பொது அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை துணைநிலை கவர்னர் எடுத்துள்ளார்.
