புதுடில்லி: டில்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து டில்லி முதல்வர் மற்றும் மீட்பு குழுவினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
தெற்கு டில்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் உள்ள 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மீட்பு பணிகளை முதல்வர் ரேகா குப்தா நேரில் சென்று ஆய்வு செய்தார். மாணவர்களின் நிலை குறித்தும், மீட்பு பணிகள் பற்றியும் முதல்வர் ரேகா குப்தா, டில்லி போலீஸ் கமிஷ்னர், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்; இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உள்ளூர் நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் தெற்கு, மேற்கு டில்லி பாஜ எம்எல்ஏ அனில் சர்மா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது; இது மிகவும் துயரமான சம்பவம். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள், இங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர். ஒட்டுமொத்த கட்டடமும் சரிந்து விழுந்துள்ளது. சரியாக எத்தனை மாணவர்கள் சிக்கியுள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.
சில மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உதவி கேட்டுள்ளனர். நான் இறைவனை வேண்டிக் கொள்கிறோம். மீட்பு பணிகளுக்காக முதல்வர் ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளார். மாணவர்களை மீட்பதில் அரசின் ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது, இவ்வாறு கூறினார்.
